
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில், திரைப்பட இயக்குனராக நடித்து, அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டியவர் நானா படேகர். கோவா திரைப்பட விழாவுக்கு வந்திருந்த அவர், அளித்த பேட்டி:
01.பொம்மலாட்டம் படப்பிடிப்பின்போது, உங்களுக்கும், பாரதி ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டதே?
அந்தப் படத்தில், திரைப்பட இயக்குனர் பாத்திரத்தை உருவாக்கியதற்கே, அவரை பாராட்ட வேண்டும். டைரக்ஷன் பணியில் உள்ள நெளிவு, சுளிவுகளை நன்றாக கரைத்துக் குடித்தவர். அவர் சூட் பண்ணும்போதும், எடிட்டிங் செய்யும்போதும், தனித்தன்மையோடு செயல்படுகிறார். படம் முடிந்த பின், அவருடன் நான் படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.பிரமிப்பாகவும் இருந்தது. சில இடங்களில் எனக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தன. ஆனாலும், பாரதிராஜா, அவரது எண்ணங்களை எனக்கு விளக்கி சமாதானப் படுத்தினார்.
02பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தை கடுமையாக விமர்சித்துள்ளீர்களே?
சஞ்சய் தத்தின் தந்தை, சுனில் தத், மரியாதைக்குரியவர்; நல்ல மனிதர்; நல்ல நடிகர். அவர் மகன் சஞ்சய் தத், பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக, நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு சலுகைகள் தர வேண்டும். தண்டனையை குறைக்க வேண்டும் என்று பலரும், திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலரும், மற்றவர்களும் கேட்கின்றனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே! வி.ஐ.பி., சாமானியர் என, சட்டத்தில் வித்தியாசம் கிடையாது.
03.உங்களுக்கு சஞ்சய் தத்தை பிடிக்காமல் போனது ஏன்?
தனிப்பட்ட முறையில் சஞ்சய் தத்திற்கும், எனக்கும் விரோதமில்லை. ஆனாலும், அவருக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவரோடு படங்களில் நடிக்க மாட்டேன். அவர் படத்தை பார்க்க மாட்டேன் என்பதில், நான் உறுதியாக இருக்கிறேன்.
04.மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா?
தமிழ் திரைப்படத் துறையில், நிறைய திறமையுள்ள, புது இளைஞர்கள், மாறுபட்ட படங்களை உருவாக்கி, வெற்றி பெற்றிருக்கின்றனர் என்று அறிகிறேன். தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.
05.அதற்கு ஏதாவது நிபந்தனைகள் உண்டா ?
ஆம்; இரண்டு நிபந்தனைகள் உண்டு. முதலாவதாக, படப் பிடிப்பு துவங்கும் முன்பே, ஸ்கிரிப்டை முதலில், எனக்கு தர வேண்டும். அதை முழுவதும் நான் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க, ஒரு தமிழ் டீச்சரை ஏற்பாடு செய்ய வேண்டும். என் வசனங்களை, நன்றாக புரிந்து, நானே டப்பிங் பேச விரும்புகிறேன். இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டால், தமிழ்ப் படங்களில் நடிக்க நான் தயார்.