
பூஜா சிபாரிசால் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார் பூர்ணா. வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா. தற்போது தகராறு என்ற படத்தில் அருள்நிதி ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தருண்குமார் இசை அமைக்கிறார்.
இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் நடிப்பதுபற்றி பூர்ணா கூறியது: நான் நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகி இருக்கும் படம் இது. பத்திரிகை செய்தி ஒன்றை அடிப்படையாக வைத்து ஸ்கிரிப்ட் தயாரித்திருப்பதாக இயக்குனர் கூறினார். கதை முழுவதும் மதுரையில் நடக்கிறது. அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். ஆரம்பத்தில் ஹீரோயினாக நடிக்க பூஜாவுக்குதான் வாய்ப்பு சென்றது. அவர் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் என் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்.
அப்படித்தான் இதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்காக பூஜாவுக்கு நன்றி சொல்கிறேன். ஹிட் படத்தில் எப்போதுதான் என் பெயர் இடம்பெறப் போகிறதோ என்று எண்ணுவேன். அந்த ஆசை இப்படத்தில் நிறைவேறும். ஹீரோ அருள்நிதியின் நடிப்பும் மாறுபட்டதாக அமைந் திருக்கும் என்றார்.