
விஷால் நடித்து, தயாரித்த பாண்டியநாடு படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறியதாவது: நடிகன் ஆகும் ஆசை எனக்கு இருந்ததில்லை. இயக்குனராக வேண்டும் என்றுதான் துணை இயக்குனர் பணியில் சேர்ந்தேன். அந்த நேரத்தில் செல்லமே வாய்ப்பு வந்தது. அது ஹிட்டானதும் என் முகத்தையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று நடிகன் ஆனேன்.
இந்த கேரக்டரையும் என்னால் நடிக்க முடியும் என்று சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று விரும்புவேன். அதனால்தான் அவன் இவன் படத்தில் நடித்தேன். நரம்பு புடைக்க சண்ட போடுகிற என்னால் இப்படியும் நடிக்க முடியும் என்பதற்காக பாண்டியநாடு கேரக்டரில் நடித்தேன். இந்த ஒரு வெற்றிக்காக 6 வருடங்கள் காத்திருந்தேன்.
எனது சில படத்தின் ரிசல்ட் தவறாக வரும்போது எனது குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள். அவர்களை சந்தோஷப்படுத்தவே இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்று உழைத்தேன். நான் தயாரித்த முதல் படமே வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அடுத்து திரு இயக்கும், நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கிறேன். பிறகு மீண்டும் எனது தயாரிப்பில் சுசீந்திரனோடு இணைவேன். விக்ராந்த் ஹீரோவாக நடிக்க ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறேன். இவ்வாறு விஷால் கூறினார். பாரதிராஜா, சுசீந்திரன், லட்சுமி மேனன், விக்ராந்த், இமான் உட்பட பலர் உடன் இருந்தனர்.