புரையோடிப்போயுள்ள இலங்கைத் தமிழ் சினிமாவையும், அடையாளமே இல்லாமல் அழிந்து போயிருக்கும் யாழ்ப்பாண சினிமாவையும் மீட்டெடுக்கும் புது விதையாக விழுந்திருக்கின்றது கவிமாறனின் ‘என்னுள் என்ன மாற்றமோ?’ திரைப்படம். இது பெரு விருட்சமாக வளர்ந்து, சினிமா மீது தீராக்காதல் கொண்டு வாய்ப்புக்கள் இன்றி தங்கள் பணத்தையே செலவழித்து நொந்து கொண்டிருக்கும் ஈழத்துக் கலைஞர்களுக்கு புது உற்சாகத்தைத் தரும் என நம்புகின்றோம்.
இலங்கையின் தமிழ்த் திரைப்படத்துறையின் வளர்ச்சி, அவ்வப்போது வெளியிடப்படும் குறும்படங்களோடு மீண்டும் மீண்டும் குறுகி விடுகின்றது. எம்மவர்கள் பிரகாசிக்க வேண்டுமானால், சகோதர மொழி அல்லது தென்னிந்தியக் கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்களின் ஆதரவுடனேயே அச்செயற்பாடு இடம்பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அதேபோல, தென்னிந்திய திரைப்பிரபலங்களைப் பின்தள்ளி எம்மவர்களே எம்மவர்களின் ஹீரோக்களாக ஜொலிக்கலாமா? என்ற பெரியதொரு கேள்விக்குறியும் இருக்கின்றது.
திரைப்பட பாடல் ஒன்று -என்னில் வந்த மாற்றம் இது ஏனோ...-
இவற்றுக்கெல்லாம், ‘முடியும்’ என்ற ஆணித்தரமான பதிலைத் தந்திருக்கின்றார்கள் என்னுள் என்ன மாற்றமோ? படக்குழு. நல்லூரான் பிக்ஸர்ஸ் எனும் மங்களகரமான பெயருடன் தொடங்கப்பட்டிருக்கும் கவிமாறானின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பான இப்படம் அவரின் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிப்பிலேயே வெளிவந்திருக்கின்றது. இளம் அணிசேர் கலைஞர்களுடன், ஒரு சில மூத்த நடிகர்களையும் உள்வாங்கி படம் திரைக்கு வந்துள்ளது.
ஹீரோ – கவிமாறன், ஹீரோயின் - தர்ஷிகா, வில்லன் - சயந்தன், ஒளிப்பதிவு – மேனன், படத்தொகுப்பு – தேவா, இசை – தேவா மற்றும் சிவசுஜாந்தன், உதவி இயக்குனர்கள் - திலீப் மற்றும் தர்சகன் மற்றும் பலர் படக்குழுவில் உள்ளார்கள்.
இறுதியில் ஹீரோ - ஹீரோயின் இணைந்தார்களா? முறைமாமன் கதி என்னவாயிற்று என்பதை சுவாரசியமான திரைக்கதையுடன் இரண்டு மணி நேரத்தில் திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.
ரொம்பவும் சாதாரணமான கதை தான்! படமாக்கப்பட்டிருக்கும் விதம் பாராட்டும் படியாக இருக்கின்றது. இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் எம் கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்களை பயன்படுத்தி இந்தத் திரைப்படத்தை எடுப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமானதல்ல. ஒரு குறும்படத்தை எடுத்து முடிப்பதற்கே எம்மவர்கள் படும் திண்டாட்டம் சொல்லி மாளாது. அப்படியிருக்கையில், முழு நீளத்திரைப்படத்தை எடுத்து அதை திரையரங்கில் வெளியிடும் அளவிற்கு கொண்டு வந்த கவிமாறனின் முயற்சி மெச்சத்தக்கது. அவருக்கு தோளோடு தோள் நின்று உழைத்த அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
படத்தின் எழுத்தோட்டத்தில், யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களை காட்டிய விதம் அருமை. முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் தொய்வாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி அமர்க்களமாக இருக்கின்றது. மூன்று பாடல்கள், அனைத்தும் படமாக்கப்பட்ட விதத்திலாகட்டும், இசையிலாகட்டும் சூப்பர். பின்னணி இசை கூட தேவைக்கேற்ற இடத்தில் சரியாகக் கையாளப்பட்டிருக்கின்றது. படத்தொகுப்பில் ஒரு சில ‘ரிப்பீட்’ காட்சிகள் இருந்தாலும் அட்டகாசம். ஒளிப்பதிவின் பல இடங்களில் ‘ட்ரவலிங் கமெரா’ பயன்படுத்தியிருப்பது கொஞ்சம் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் பார்ப்போரை குழப்பவில்லை. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களே அறிந்திராத வித்தியாசமான இடங்களில் வெளிப்புறப்படப்பிடிப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன.
படத்தில் மைனஸ் என்று எதுவுமே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். படக்குழுவின் முயற்சிக்கும், நாங்கள் எதிர்பார்த்துப் போனதற்கு மேல் தந்த பிரமாதத்திற்கும் முன்னால் மைனஸ்கள் எல்லாம் ப்ளஸ்களாகிவிட்டன. தவிர, இவ்வாறான முயற்சிகளில் மைனஸைக் கண்டுபிடித்து ‘முட்டையில் மயிர் பிடுங்கும்’ கைங்கரியத்தைச் செய்து படைப்பாளிகளை முடக்குவது ஒரு நல்ல விமர்சகனுக்கு அழகல்ல.
திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சி ஒன்று
கோடிகளைக் கொட்டி படங்களை எடுத்தும், ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் தியேட்டரை விட்டு ஓடும் தென்னிந்திய சூப்பர் ஹீரோக்களின் படங்களுடன் ஒப்பிடுகையில், சில லட்சங்களைக் கொண்டு எம்மவர்கள் தந்த படைப்பு என்றென்றும் பாராட்டக்கூடியதே! இனிவருங்காலங்களில் இலங்கையிலும், வடகிழக்கிலும் தமிழ்த்திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு தனவந்தர்கள் முன்வர வேண்டும். அவர்களுக்கு இலாபமீட்டும் ஒரு இடமாக யாழ்ப்பாண திரைத்துறை இருக்கின்றது என்பதை உணர்த்துவதற்கு எம்மவர்கள் அனைவரும் இவ்வாறான முயற்சிகளுக்கு பூரண ஆதரவைக் கொடுக்க வேண்டும்.
viva - KANA VARO