நடிகர் : சிவா, சந்தானம்
நடிகை : தன்ஷிகா, சந்தியா,
இயக்குனர் : ஐ. ராஜசேகரன்
இசை : விஜய் எபனேசர்
ஓளிப்பதிவு : வெற்றி
கடந்த சில ஆண்டுகளாய் காமெடி படங்கள் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்துள்ள படம்தான் ‘யா யா’.
ஹீரோ சிவா எந்தவொரு வேலை வெட்டியும் இல்லாமல், அரசாங்க வேலை கிடைத்தால்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்குடன் ஊர் சுற்றி வருகிறார். இவருடைய நண்பனாக கூடவே சுற்றித் திரிகிறார் சந்தானம். ஒருநாள் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது தன்ஷிகாவைப் பார்க்கும் சிவா, அவர் மீது காதல் கொள்கிறார். அவரைத் தொடர்ந்து பலமுறை தன் காதலைச் சொல்ல பல்வேறு முயற்சிகள் செய்கிறார். ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இந்நிலையில், தன் மீதான காதலைத் தெரிந்துகொள்வதற்காக மாடலான பவர் ஸ்டாரை கேடயமாக பயன்படுத்துகிறார் சிவா. அதில், சிவாவுக்கு வெற்றி கிடைக்கிறது. மறுமுனையில் சந்தானமும், சந்தியாவும் காதலர்களாக வலம் வருகிறார்கள். இந்நிலையில், ஒருநாள் பெண் கவுன்சிலரான தேவதர்ஷினி மீது சிவா தவறுதலாக மோதி விடுகிறார். இந்த மோதல் தேவதர்ஷினிக்குள் சிவா மீது காதலை வரவழைக்கிறது. சிவாவை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறார் தேவதர்ஷினி. இதற்காக, சிவாவின் நண்பனான சந்தானத்தை அணுகுகிறார். சந்தானம், சிவா ஏற்கெனவே தன்ஷிகாவை காதலிப்பதை அவரிடம் கூறுகிறார். எனவே, தேவதர்ஷினி இவர்களின் காதலை முறிக்க முடிவெடுக்கிறார். இதற்காக சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து அவர்களின் காதலை பிரிக்கச் சொல்கிறார்.
இறுதியில், சந்தானம் சிவாவுக்கு துரோகம் செய்தாரா? சிவா, தன்ஷிகா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.
சிவா நடிப்பில் வெளிவந்த ‘தமிழ்படம்’, ‘தில்லுமுல்லு’ ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்ததோ, அதே அளவுக்கு இந்த படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். இவருடன் சந்தானமும் சேர்ந்தால் காமெடிக்கு சொல்லவா? வேண்டும். படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழைதான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்துக்கு இந்த படத்தில்தான் தனியாக ஒரு ஜோடி கொடுத்திருக்கிறார்கள். காதல் சந்தியா இவருடைய காதலியாக வருகிறார். சிறிது இடைவெளிக்கு பிறகு திரையில் பளிச்சிட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும்.
சிவாவுக்கு ஜோடியாய் தன்ஷிகா, ‘பரதேசி’ படத்தில் பார்த்த தன்ஷிகாவை இப்படத்தில் மாடர்னாக பார்க்கும்போது வியக்க வைக்கிறார். சிவா தன்னைக் காதலிக்கிறார் என்று தெரிந்திருந்தும், அதை கண்டுகொள்ளாமல் அசால்டாக திரியும் இவருடைய நடிப்பு பாராட்ட வைக்கிறது.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளிவந்த பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் வருகிறார். இவர் ஒருசில காட்சிகளே என்றாலும், இவர் செய்யும் காமெடி ரசிக்க வைக்கிறது. மற்றும் சிவாவின் அப்பா-அம்மாவாக வரும் இளவரசு-ரேகா, கவுன்சிலராக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் ராஜசேகரன் முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே பிரதானமாக வைத்து எடுத்திருப்பதால், படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜய் எபினேஷர் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், திரையில் பார்க்கும்போது காலை ஆட்ட வைத்திருக்கிறது. பின்னணி இசையிலும் முன்னேற்றம் தேவை. வெற்றி ஒளிப்பதிவில் பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.
